×

இலங்கையில் 1978 முதல் உள்ள அதிபர் ஆட்சி முறையை ஒழிக்க சரியான தருணம்: ஜனதா விமுக்தி பெரமுனா கருத்து

கொழும்பு: ‘இலங்கையில் அதிபரின் நேரடி ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டுவர இதுவே சரியான தருணம்’ என்று ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி கூறியுள்ளது. இலங்கையில் கடந்த 1978 முதல் அதிபர் ஆட்சி முறை அமலில் உள்ளது. இங்கு, பிரதமரை விட ஜனாதிபதிக்கே அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிபர் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக முக்கிய எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சேவுடன் ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி) பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், அதிபர் ஆட்சியை முறையை ரத்து செய்ய, அரசியலமைப்பு சட்டத்தில் 20வது திருத்தம் கொண்டு வர ராஜபக்சேவின் ஆதரவு கோரப்பட்டது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் ்கொண்டு வரவும் ஜனதா விமுக்தி பெரமுனா திட்டமிட்டுள்ளது.

ஜேவிபி கட்சியின் மூத்த தலைவர் பிமல் ரட்நாயக கூறுகையில், “அதிபர் ஆட்சி முறையை நீக்குவதற்கு ராஜபக்சேதான் திட்டமிட்டார். அதே நேரம், அதிபர் மைத்ரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, ராஜபக்சே உள்ளிட்ட தற்போதைய தலைவர்கள் மீண்டும் அதிபர் தேர்தலை எதிர்கொள்ள அஞ்சுகின்றனர். ஏனென்றால், அதில் வெற்றி பெற முடியாது என்பது அவர்கள் அனைவருக்கும் தெரியும். எனவே, இதற்கு ஆதரவு தெரிவிப்பார்கள். கடந்த 1978ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருக்கும் அதிபர் நேரடி ஆட்சி முறையை ரத்து செய்ய இதுவே சரியான தருணம். சிறிசேனாவும், விக்ரமசிங்கவும் மாகாண சபைத் தேர்தல் நடத்துவதை தவிர்க்க விரும்புகின்றனர்.

அரசியலமைப்புச் சட்டத்தில் 20வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டால், அதிபர் தேர்தல் நடத்த தேவையிருக்காது. நேரடியாக நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமே நடத்தப்படும்” என்று கூறினார். ஏற்கனவே 2 முறை அதிபராக இருந்ததால் மீண்டும் போட்டியிட முடியாது என்பதை அறிந்ததால் ராஜபக்சே இதற்கு ஆதரவு தெரிவிக்கிறார். அதேசமயம் இந்த முறை அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சே அதிபர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sri Lanka , Sri Lanka, President's rule, Janata Vimukti Peramuna
× RELATED இன்று தொடங்குவதாக இருந்த நாகை-இலங்கை...